Its wholesome ❤


இன்று பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் ஒரு பாதி கிழிந்த காகிதத்தை கொடுத்து என்னை படிக்க சொன்னார்..அவருக்கு ஒரு 65 வயதுக்கு மேல் இருக்கும்..அழுக்கு சட்டையுடன் கட்டப்பையில் டிபன் பாக்சில் யாருக்கோ சாப்பாடு கொண்டு போகிறார் போல..


அந்த கடிதத்தில்,


அன்பு மாமாவுக்கு,

நீங்க எப்படி இருக்கீங்க..

ஒழுங்கா சாப்டறீங்களா..

என்னைய பத்தி எப்பவாச்சும் நினச்சுபீங்களா..

எப்ப ஊருக்கு வாரீங்க..

வந்ததும் என்ன கல்யாணம் கட்டிகிடுங்க..

காத்திட்டு இருக்கேன் உங்க நெனப்புல..


அப்படின்னு எழுதி இருந்தது..


படித்து முடித்ததும் அவர் பேச ஆரம்பித்தார்..தம்பி 48 வருசத்துக்கு முந்தி நான் பட்டணத்துல வேலை செஞ்சிட்டு இருந்தப்போ எனக்கு அவ எழுதுன காதல் கடுதாசி..நான் னா அவருக்கு உசுரு தம்பி.. எனக்கும் அப்படிதான்...கல்யாணம் ஆகி 45 வருசம் ஆகுது தம்பி..இப்ப அவளுக்கு ஒரு ஆப்ரேஷன் ன்னு ஆஸ்பத்திரியில சேத்து இருக்கேன்..அவளுக்கு தான் சாப்பாடு கொண்டு போய்ட்டு இருக்கேன் தம்பி.. எப்ப்பவாச்சும் மனசு சரியில்லனா இந்த கடுதாசி-ய யார் கிட்டயாச்சும் கொடுத்து படிக்க சொன்னா அவ சொல்ற மாதிரியே இருக்கும் தம்பி என்று வெள்ளந்தியாய் பேசினார்..


அதுக்காகவே இந்த கடுதாசிய எப்பவும் என் சட்டை பையிலயே வெச்சிசிருப்பேன் தம்பி..


நீங்க ஏதும் தப்பா எடு்துக்காதீங்க ன்னு சொன்னாரு..


இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு பா ன்னு கேட்டுவிட்டு அவங்களுக்கு படிக்க தெரியுமான்னு கேட்டேன்..


நாலாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கா அந்த மகராசி..கை நாட்டா இருந்த எனக்கு கையெழுத்து போட சொல்லி குடுத்தவளே அவ தான் என்று கண் கலங்கினார்..


பா 45 வருசம் கழிச்சு அந்த காதல் கடுதாசிக்கு நாம பதில் எழுதுவோமா.. என்று கேட்டேன்..

உடனே முகமெல்லாம் புன்னகையுடன் சரி என்றார்..


நான் அந்த காதல் கடித்ததை வாங்கி,


நீ கவலைப்படாத..உனக்காக நான் வருவேன்...இப்ப மட்டும் இல்ல..எப்பயும்..

அப்றம்.. எப்பயாச்சும் என்ன நினச்சுபீங்களா ன்னு கேட்டல,

மாமாவுக்கு எப்பவுமே நெனப்பு மொத்தமே உன் மேல தான்..

நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே சந்தோசமா இருக்கணும்..

ஏன்னா..நீ தான என் சாமி...


என்று எழுதி கொடுத்தேன்...


நான் ஒருமுறை அவரிடம் படித்து காட்டி விட்டு,

இத போயி உங்க பொண்டாட்டி குடுத்து படிக்க சொல்லுங்க என்றேன்..

அவர் கண்களில் ஆனந்த கண்ணீர்..

அவர் இறங்க வேண்டிய இடமும் வந்தது..

நீங்க நல்லா இருக்கணும் தம்பி..உங்க பேரு தம்பி..நான் விக்னேஷ்...விக்னேஷ்வரன் என்றேன்..


இறங்குவதற்கு முன்பு அசுரன் படத்தின் Climax - இல் தனுஷ் சிரிப்பதை போன்று ஒரு புன்முறுவலை என் மீது தெளித்தார்..


கவிதையாய் இருந்தது..


நான் இதுவரை யாருக்கும் காதல் கடிதம் எழுதியதில்லை..ஆனால்,மேலே எழுதிய அந்த காதல் கடித்ததின் பதிலை விட சிறப்பான ஒரு காதல் கடித்தத்தை என்னால் எழுதி விட முடியுமா என்று தெரியவில்லை..


கிழிந்த காதல் கடிதங்கள் ஒருகாலத்தில் இரண்டு இதயங்களை தைக்க பயன்பட்டிருக்கும்..


மனிதர்களுக்கு மட்டுமே வயதாகிறது..


அவர்களின் காதல் தினம் தினம் புது புது பூக்களை மலர்த்தி கொண்டே தான் இருக்கிறது..


ஆம்..இந்த பொய் வாழ்வின் பூரணம் காதல் தான்..


#love 💚

 

Comments

Popular Posts